"தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது"-சீமான் பேட்டி
விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பரமக்குடி
விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் பரமக்குடியில் நேற்று நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது கட்சியின் கட்டமைப்பு பணிகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சியை கலைக்க முடியாது
தி.மு.க. ஆட்சியை எளிதாக கலைக்க முடியாது. சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்கும் முறை இப்போது இல்லை. ஒருவேளை ஒரே நாடு, ஒரே தேர்தல் என நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் வாய்ப்பு உள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவ்வாறு கலைக்க முடியும்? ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விளையாடுகின்றனர்.
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு மாநிலங்களவை எம்.பி. கொடுத்து மத்திய மந்திரி ஆக்குகிறார்கள். தேர்தலில் மக்களையே சந்திக்காதவர்களுக்கு, ஒரு ஓட்டு கூட வாங்காதவர்களுக்கு மிகப்பெரிய பதவி வழங்கப்படுகிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்கிறீர்கள். இது கேலிக்கூத்தாக உள்ளது. ஆனால், அதிகாரம் மக்களுக்கே என்று பேசுகிறீர்கள்.
இங்கு அடிப்படையே தவறாக இருப்பதால் அந்த அடிப்படையையே தகர்க்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டி பயனில்லை.
தகுதி பார்க்கும் அரசு
நாட்டில் உள்ள அனைத்து குடிமகனுக்கும் அரசியல் பேச உரிமை உண்டு. நீதிபதி, கலெக்டர், அதிகாரிகள் என படித்தவர்கள் யாரும் பேசக்கூடாது என்கிறீர்கள். ஆனால் இதை எல்லாம் இயக்கக்கூடிய முதல்-அமைச்சர் பேசலாம் என்கிறீர்கள்.
வள்ளலார் சனாதானத்திற்கு எதிராக சுத்த சன்மார்க்கம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.
தேர்தல் நேரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இப்போது அதை கொடுங்கள் என நெருக்கடி கொடுக்கும்ேபாது, தகுதி பார்த்து கொடுக்கப்படும் என்கிறார்கள்.
ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு அரசு தகுதி பார்க்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு தகுதி பார்க்கக்கூடாதா? யாராவது இலவசம் வேண்டும் என கேட்டார்களா?
ராணுவ பாதுகாப்பு
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்களா? மத்தியில் ஆளும் அரசு செயல் அரசாக, சேவை அரசாக இல்லை. விளம்பர அரசாகத்தான் உள்ளது. தக்காளியை திருடிச் சென்று விடுவார்கள் என காவலாளிகளை பாதுகாப்புக்கு நிறுத்துகின்றனர். இது எந்த நாட்டிலாவது இருக்கிறதா? தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை வரவேற்றுப் பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், டாக்டர் களஞ்சியம், சிவக்குமார், ராசு. மாநில இளைஞர் பாசறை செயலாளர் சாரதிராசா, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.