ரேஷன் கடைகளில் தக்காளி..? - அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை


ரேஷன் கடைகளில் தக்காளி..? - அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 2 July 2023 5:18 AM GMT (Updated: 2 July 2023 5:29 AM GMT)

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை கடந்தசில நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது, ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story