கன்னியாகுமரியில் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!

ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
கன்னியாகுமரியில் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அதன்படி தற்போது அய்யப்ப பக்தர்களின் சீசன் காலம், தொடர் விடுமுறை, ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் 2024 -ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளதையடுத்து போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com