சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை, சுதந்திர தினத்தையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு குளத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

சுற்றுலா தலம்

அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தொடர் விடுமுறை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி சுற்றுலா தலத்தில் குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலேயே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

சித்தன்னவாசலை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்க்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும், செல்ேபான், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

படகு குளம்

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை பொழுதை கழிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்று விடுகின்றன. மேலும் படகுகுளத்தில் போதுமான படகுகள் இல்லை. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கின்றோம். எனவே புதிய படகுகளை இயக்க வேண்டும். சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு இன்னும் பொருட்களை சேர்க்க வேண்டும். இசை நீரூற்றை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்ைக விடுத்தனர்.

ஜல்லிக்கட்டு காளை சிலை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் நுழைவுவாயிலில் ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளையில் வீரர் ஒருவர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அருகில் நின்று தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர்.

இலவச அனுமதி

சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் சுதந்திரதினத்தையொட்டி குகை ஓவியம், மலைமீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் இலவசமாக சென்று வருகின்றனர்.


Next Story