சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

சித்தன்னவாசலில் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய வசதிகள் ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

சுற்றுலா தலம்

அன்னவாசல் அருகே சித்தன்னவாசலில் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு புத்தாண்டையொட்டி குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள், என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலைமீது அமர்ந்த சமணர் படுகையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

படகு குளம்

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்வது வழக்கம். இந்தநிலையில் 8 படகுகள் இருந்து வந்த நிலையில் தற்போது 6 படகுகள் சேதமடைந்துள்ளது. தற்போது 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதிலும் இரண்டுமே உடைந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. சில சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா தலத்தில் உள்ள விளையாட்டு பொருட்களில் அதிக அளவு உடைந்துள்ளதால் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் ஆர்வமுடன் சித்தன்னவாசல் வரும் சிறுவர்கள், சிறுமியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சித்தன்னவாசல் முழுவதும் அதிகமான இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் டிக்கெட் வழங்கும் இடத்தில் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

உணவு கிடைப்பதில்லை

மேட்டுச்சாலை மகாலெட்சுமி:- சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை பொழுதை கழிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. இதற்காக அன்னவாசல் சென்று சாப்பாடு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கான போக்குவரத்து வசதியும் இல்லை எனவே சித்தன்னவாசலில் உணவு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

பழுதடைந்த படகுகள்

காட்டுப்பட்டி ஜெயந்தி:- படகு குளத்தில் போதுமான படகுகள் இல்லை. 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பழுதடைந்து உள்ளது. அந்த படகிலும் செல்வதற்கு அச்சமாக உள்ளது. மேலும் 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுவதால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கின்றோம். பல மணி நேரமாகும் என்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உடைந்து கிடக்கும் படகுக்கு பதிலாக புதிய படகுகளை இயக்க வேண்டும். இசை நீரூற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவை மேம்படுத்த வேண்டும்

பொன்னமராவதி நகரமடம் அரசுபள்ளி மாணவி ஜூஹானா:- பள்ளி விடுமுறை, புத்தாண்டையொட்டி விளையாடி மகிழ்வதற்காக சித்தன்னவாசலுக்கு சுற்றுலா தலத்திற்கு வந்தோம். ஆனால் பூங்காவில் என்னை போன்ற சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றார் போல் பொருட்களே இல்லை. இங்கு இருக்கும் ஒரு சில விளையாட்டு பொருட்களும் உடைந்து கிடக்கிறது. இதனால் எங்களால் விளையாட முடியவில்லை. இன்னும் பல்வேறு விளையாட்டு பொருட்களை கூடுதலாக சேர்த்து விளையாட்டு பூங்காவை மேம்படுத்த வேண்டும்.

நடமாடும் ஏ.டி.எம்.

விராலிமலை மோகன்:- சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் நுழைவு சீட்டுகள் எடுப்பதற்கு பணம் மட்டுமே பெறப்படுகிறது, மேலும் ஏதேனும் பொருட்கள் வாங்கவும் பணம் தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடம் ஏ.டி.எம்., ஜீபே, போன்பே இருப்பதால் சுற்றுலா தலத்தில் அந்த சேவைகளும் இல்லை என்பதால் சிரமமாக உள்ளது. இதுபோன்ற பண்டிகை நாட்களில் சித்தன்னவாசலில் நடமாடும் ஏ.டி.எம். சேவையை ஏற்படுத்தினால் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

உணவு அறை வேண்டும்

புதுக்கோட்டை தேவி:- சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை அங்கே உணவு கொண்டுவந்து பொழுதை கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடுங்கி சென்று விடுகின்றன. எனவே உணவை சாப்பிடுவதற்கு உணவு அறை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story