விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை - வெளியான புதிய தகவல்
விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.
சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மதியம் மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது அதில்,
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அதில் கூறப்பட்டது. இன்று 2-வது முறையாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.
டிரக்கியாஸ்டமி என்பது கழுத்தின் வெளிப்புறம் மூச்சுக்குழாயில் ஒரு சிறிய துவாரம் போட்டு, திறப்பை உருவாக்குவதன் மூலம் சுவாசத்தை சீராக்கும் மருத்துவ நடைமுறையாகும். அந்த துவாரத்தில் செருகப்பட்ட டிரக்கியாஸ்டமி குழாய் மூலம் சுவாசிக்க முடியும்.