மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2023 12:00 AM GMT (Updated: 11 July 2023 12:00 AM GMT)

கூடலூர்-ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மழை குறைந்தது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத வகையில் காலநிலை நிலவியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி முதல் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. மாவட்டம் முழுவதும் மிதமான வெயிலும் அடித்தது. தொடர்ந்து பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வழக்கம்போல் நேற்று சென்றனர். இதற்கிடையே தொடர் மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சாலையோரம் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மரங்கள் விழுந்தன

இந்தநிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா பகுதியில் மதியம் 2 மணியளவில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதே பகுதியில் மற்றொரு ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவல் அறிந்த பைக்காரா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாள்கள் மூலம் ராட்சத மரங்களை வெட்டினர். ஆனால், மரங்கள் பெரிய அளவில் இருந்ததால் சாலையில் இருந்து அகற்ற முடியவில்லை. இதனால் மின் வாள்களை கொண்டு துண்டு, துண்டாக வெட்டப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ராட்சத மரத்துண்டுகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் 3 மணி நேரம் தாமதமாக தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story