மலை கிராமத்துக்கு டிரான்ஸ்பார்மரைதலையில் சுமந்து சென்ற மக்கள்


மலை கிராமத்துக்கு டிரான்ஸ்பார்மரைதலையில் சுமந்து சென்ற மக்கள்
x

கோதை மலை கீழூர் கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்க மலை கிராம மக்கள் டிரான்ஸ்பார்மரை தலையில் சுமந்து சென்றனர்.

நாமக்கல்

ராசிபுரம்

மலை கிராம மக்கள்

ராசிபுரம் அடுத்த கோதைமலையில் கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. அங்குள்ள மலைவாழ் மக்கள் ராசிபுரம், வெண்ணந்தூர் போன்ற ஊர்களுக்கு கரடு முரடான பாதை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கோதைமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது. இந்த நிலையில் தரை மட்டத்திலிருந்து 6 கி.மீ. உயரத்தில் உள்ள கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது.

இதனால் அந்த பகுதியில் சில நாட்களாக மின்தடை ஏற்பட்டது. பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மலைவாழ் மக்கள் கீழே கொண்டு வந்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழூருக்கு கொண்டு செல்வதற்காக கோதைமலை அடிவாரத்தில் வைத்திருந்தனர். மலைப்பகுதியில் உள்ள கீழூருக்கு கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டது.

தலையில் சுமந்து சென்றனர்

இந்த நிலையில் நேற்று கோதை மலை அடிவாரத்தில் இருந்து கீழூருக்கு 750 கிலோ எடை கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தலை சுமையாக சுமந்து சென்றனர். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர் ரவி (நாமகிரிப்பேட்டை), உதவி மின்வாரிய பொறியாளர் விக்னேஷ்வரன் (புதுப்பட்டி) மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், வனிதா உள்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அனுப்பி வைத்தனர். இன்னும் 3, 4 நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் கீழூர் பகுதியில் வைக்கப்பட்டு மின் வினியோகம் நடைபெறும் என்று மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர்.

இதன் மூலம் கடந்த 20 நாட்களாக மின் வசதி இன்றி தவித்த கீழூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story