கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த பழங்குடி இன மக்கள்


கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த பழங்குடி இன மக்கள்
x

கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக பழங்குடி இன மக்கள் விமானத்தில் பயணம் செய்தனர்.

சென்னை

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர். இவர்கள் 'இண்டிகோ' விமானத்தில் காலை 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை விமான பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை, அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. மக்கள் வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்துவரும் இந்த பழங்குடி மக்கள், 'ஈஷா' 'அவுட்ரீச்' தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர். இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டு, தங்கள் சொந்த செலவில் இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி, இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின்போது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது. இவர்களை ஈஷா மைய நிர்வாகிகள் ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். சென்னையில் 2 நாள் தங்கி இருந்து சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கோவைக்கு ரெயிலில் செல்ல உள்ளனர்.

1 More update

Next Story