சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும்-மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்


தினத்தந்தி 26 July 2023 12:30 AM GMT (Updated: 26 July 2023 12:30 AM GMT)

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.

நீலகிரி

ஊட்டி

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.

பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பழங்குடியின மாணவிகள் தொழில்நுட்பம் மூலம் மேம்பாடு அடைவதற்கான பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை உறுப்பினர் கீதா நடராஜன் வரவேற்றார். இதில் வக்கீல்கள் விஜயன், கோமதி, ரேவதி, தன்யா ஜோசப், பழங்குடியின பெண்கள் முன்னேற்ற ஆர்வலர் நீஜு சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு நர்சிங் கல்லூரி மற்றும் கூடலூர் அஸ்வினி ஆதிவாசி நர்சிங் கல்லூரி மாணவிகள் 200 பேர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

சிவில் சர்வீசஸ் தேர்வுகள்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல் னபடுத்தி வருகிறார். பெண்கள் சிறு வயதில் திருமணம் செய்வதன் மூலம் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பாதிக்கப்படும் பெண்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அவர்களுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதேபோல் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும் இருப்பிட வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதற்கு, 14567 என்ற எண்ணெய் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் சமூக நலத்துறை மூலம் பெண்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்றால் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். இதேபோல் பழங்குடியின மாணவிகள் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும்.

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு

அரசு அதிகாரியாகிவிட்டால் தங்களது சமூகத்திற்கு தேவையான முன்னேற்றங்களை அவர்களே முன்னெடுத்துச் செல்லலாம். மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் தொழில்நுட்பத்தை பெண்கள் கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story