வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்


வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்
x

வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 62 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்திட மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம். இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், எல்.எல்.ஆர். சான்று பெற்றவராகவும் இருக்க வேண்டும். 62 நிறுவனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு வயது சான்றிதழ், வருமானசான்றிதழ், புகைப்படம், ஜாதிச்சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/LLR (Leaners Licence Registration) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றில் மாவட்ட வக்பு கண்காணிப்பாளரின் மேலொப்பம் பெற்று தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story