இருசக்கர வாகன திருட்டு கும்பல் சிக்கியது
கருமத்தம்பட்டியில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தனிப்படை விசாரணை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் குவிந்தது.
இதையடுத்து போலீசார், தனிப்படை அமைத்து, அந்த திருட்டு கும்பலை பிடிக்க களமிறங்கினர். இதன் ஒரு பகுதியாக சோமனூர் சந்தைபேட்டையில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் 3 நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
அந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கருமத்தம்பட்டியை சேர்ந்த விஜய்(வயது 30), சோமனூரை சேர்ந்த விக்ரம்(22), கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த சின்னராஜ்(27) ஆகியோர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதி மட்டுமின்றி விழுப்புரம் உள்பட வெளியூர்களிலும் அந்த கும்பல் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.