உடுமலை, மடத்துக்குளத்தில் நிலவும் குளிர்ந்த வானிலை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவி வரும் நிலையில் சாரல் மழையால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சாரல் மழை
தமிழ்நாடு முழுவதும் தென்மேற்குப்பருவமழை தொடங்கியுள்ளதால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டப்பகுதிகளுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
அதனை உற்சாகமாக அனுபவிக்கும் மக்கள் சமூக வலைத்தளங்களில் 'மீம்ஸ்' வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேநேரத்தில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் கொசு உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியமாகும்.
மகசூல் பாதிக்கும்
சாக்கடைக்கால்வாய்களை முறையாக தூர் வாரி கழிவு நீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும்.கொசு மருந்துகள் தெளித்து கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.சாலை ஓரங்களில் குப்பை கழிவுகள் தேங்குவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பில் வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கவும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும் சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரல் மழையால் காய்கறிகள் உள்ளிட்டவற்றின் மகசூல் பாதிக்கும் என்று தெரிவித்துள்ள விவசாயிகள் கன மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.