உரிமை கோராமல் பல ஆண்டுகளாக போலீஸ் நிலையங்களில் கிடக்கின்றன:பறிமுதல் வாகனங்கள் குறித்து 3 மாதத்துக்கு ஒருமுறை கோர்ட்டுகளுக்கு தெரிவிக்க வேண்டும்- டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோராமல் பல ஆண்டுகளாக போலீஸ் நிலையங்களில் கிடக்கும் வாகன விவரங்களை 3 மாதத்துக்கு ஒருமுறை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோராமல் பல ஆண்டுகளாக போலீஸ் நிலையங்களில் கிடக்கும் வாகன விவரங்களை 3 மாதத்துக்கு ஒருமுறை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பறிமுதல் வாகனங்கள்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர்கனி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் கஞ்சா கடத்தல் வழக்கில் எனக்கு சொந்தமான ஜீப் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே போலீசார் பறிமுதல் செய்த ஜீப்பை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, கஞ்சா கடத்தல் வழக்கில் மனுதாரர் 2-வது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கு மதுரை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே மனுதாரர் தனது வாகனத்தை ஒப்படைக்கக்கோரி சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தான் மனு தாக்கல் செய்ய முடியும். மேலும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்த வாகனங்களை இடைக்காலமாக விடுவிக்கும்படி கேட்க முடியாது. எனவே இது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் கோர்ட்டுகளிலும், போலீஸ் நிலையங்களிலும் ஏராளமானவை குவிந்து கிடக்கின்றன என்றும் தெரிவித்தார்.
இடைக்காலமாக கேட்க முடியாது
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் வாகனத்தில் கஞ்சா கடத்தியபோது போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அந்த வாகனத்தை கேட்டு, கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். மேலும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் சொத்துகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போதை தடுப்பு பிரிவு சட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
இவற்றை கீழ்கோர்ட்டுகளும், விசாரணை அதிகாரிகளும் முறையாக பின்பற்றுவது இல்லை. எனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பராமரிக்கும் வழிகாட்டுதல்கள் மீண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, போதைப்பொருள் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனம் குறித்த தகவல்களை அதன் உரிமையாளருக்கு போலீசார் தெரிவிக்க வேண்டும்.
வாகன விவரங்கள் தாக்கல்
அதேபோல விசாரணை கோர்ட்டுக்கும் தகவல் தெரிவித்து, வாகன விவரங்களுடன், அனைத்து ஆவணங்களையும், புகைப்படங்களாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை பரிசோதனைக்கு அனுப்பி, அதன் சான்று விவரங்களை பாதுகாக்க வேண்டும். பறிமுதல் வாகனங்களை ஒப்படைக்கக்கோரி அதன் உரிமையாளர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால், வழக்கின் தன்மையை பொறுத்து கீழ்கோர்ட்டுகள் உரிய முடிவு எடுக்கலாம். அந்த வழக்கு விசாரணை முடியும் வரை வாகனத்தை கோர்ட்டு பாதுகாப்பிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதுபோன்ற வழக்கில் பறிமுதல் ஆன வாகனங்களை மீண்டும் உரிமை கோரவில்லை என்றால் அதுகுறித்த தகவல்களை 3 மாதத்துக்கு ஒருமுறை கீழ்கோர்ட்டுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கையை போலீஸ் டி.ஜி.பி. எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.