வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 July 2023 3:17 PM IST (Updated: 12 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இதுவரை வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். 30.6.2023-ம் தேதி நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள்

மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ அல்லது வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ அல்லது ஜெராக்ஸ் நகல் எடுத்த விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் இணைக்க வேண்டும். அதனுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுடன் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31.8.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை. அவர்கள் இதர ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம்.

உதவித்தொகை எவ்வளவு?

இதன்படி 10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் உதவித்தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story