உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை -ஒன்றியக்குழு தலைவர்


உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை -ஒன்றியக்குழு தலைவர்
x
தினத்தந்தி 21 Dec 2022 7:15 PM GMT (Updated: 21 Dec 2022 7:15 PM GMT)

நாகை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் அனுசுயா கூறினார்.

நாகப்பட்டினம்

நாகை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் அனுசுயா கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

நாகையில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் அனுசுயா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

சுந்தரமூர்த்தி (அ.தி.மு.க.):-

3 ஆண்டுகளாக பெரிய அளவில் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. கடந்த காலங்களில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை ஒவ்வொரு வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்வதே பெரிய காரியமாக உள்ளது. இந்த ஆண்டு ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதை, ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் வார்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.

மழையில் நனையும் அரிசி மூட்டைகள்

மாலதி (தி.மு.க.):- புதுச்சேரி- ஆவராணி பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால் அரிசி மூட்டைகள் நனைகிறது. கட்டிடத்தை சரி செய்ய வேண்டும்.

மணிவண்ணன் (அ.தி.மு.க.):- ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கி உள்ள ரூ.5 லட்சத்தை வைத்து எந்த பணிகளை செய்ய முடியும்? எனவே நிதியை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

காளிதாஸ் (அ.தி.மு.க.): அக்கரைப்பேட்டையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால் அப்போது அமைக்க முடியாது, அதற்கான சாத்திய கூறுகள் இல்லை எனக்கூறிவிட்டனர். தற்போது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு கலெக்டர் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்துள்ளனர். தற்போது மட்டும் எப்படி சாத்தியமானது? என்று தெரியவில்லை.

கூடுதல் நிதி

அனுசுயா (தலைவர்):- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பணிகளை தேர்வு செய்து வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story