பேரூராட்சி அலுவலகத்தை பூட்டிய வி.சி.க. நிர்வாகி சிறையில் அடைப்பு


பேரூராட்சி அலுவலகத்தை பூட்டிய வி.சி.க. நிர்வாகி சிறையில் அடைப்பு
x

ஏலம் எடுத்த கடையின் சாவியை கொடுக்காததால் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற அலுவலக கதவை இழுத்து பூட்டிய வி.சி.க. பிரமுகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

கடை ஏலம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளை வாடகைக்கு விடுவதற்காக கடந்த மே மாதம் ஏலம் விடப்பட்டது. அப்போது பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் என்பவர் 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலை எடுத்து ஏலத்தில் கலந்து கொண்டு, 4-ம் நம்பர் கடையை ஏலம் எடுத்தார். ஆனால் இதுவரை அவருக்கு 4-ம் நம்பர் கடை சாவியை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து ஏலம் எடுத்த கடை சாவியை தன்னிடம் கொடுங்கள் அல்லது நான் ஏலத்தில் கட்டிய ரூ.50 ஆயிரத்தை திரும்ப தருமாறும் பலமுறை கேட்டு வந்துள்ளார். இருப்பினும் பேரூராட்சி நிர்வாகம் பிரபாகரனிடம் சாவியை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

அலுவலகத்துக்கு பூட்டு

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் நேற்று முன்தினம் மதியம் திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் பணியில் இருந்த அலுவலர்கள், பணியாளர்களை உள்ளே வைத்து திடீரென பேரூராட்சி அலுவலக கதவை இழுத்து பூட்டு போட்டு பூட்டினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவி அமுதலட்சுமி ஆற்றலரசு இரும்பு சுத்தியல் கொண்டு பூட்டை உடைத்து அலுவலகத்தைத் திறந்து விட்டதுடன், இதுபற்றி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வி.சி.க. பிரமுகர் சிறையில் அடைப்பு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு அலுவலகத்தை பூட்டிய பிரபாகரனை திட்டக்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் பிரபாகரனை 15 நாள் பிணை காவலில் கைது செய்து, விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story