வேளாங்கண்ணி ஆலய திருவிழா பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பொன் விழா ஆண்டு திருவிழாவையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வேளாங்கண்ணி ஆலய திருவிழா பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

29-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6-வது அவென்யூ 3-வது பிரதான சாலை, 7-வது அவென்யூ வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கு வருகிறது. செப்டம்பர் 1-ந் தேதி மாலை 4.30 மணிக்கு இளைஞர் ஊர்வலமும், 2-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தேர்பவனியும், 3-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நற்கருணை ஊர்வலமும் நடக்கிறது. 7-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு 6-வது அவென்யூ, 4-வது பிரதான சாலை, 2, 3 மற்றும் 7-வது அவென்யூ வழியாக சென்று திரும்பி ஆலயத்துக்கு வந்தடையும்.

எனவே இந்த திருவிழாவையொட்டி பெசன்ட்நகர் பகுதியில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

* அடையாறு திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். மக்கள் கூட்டம் அதிகமாகவும், வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாகவும் இருக்கும் போது 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் (எம்.எல். பார்க்) திரும்பி, எல்.பி. சாலை, எம்.ஜி.சாலை வழியாக செல்ல வேண்டும்.

* எம்.ஜி. சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது, பெசன்ட் நகர் 1-வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் பஸ் நிலையம், 2-வது அவென்யூ வழியாக திருப்பி விடப்படும்.

* திருவிழாவுக்கு வருகிறவர்கள் தங்களது வாகனங்களை ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2-வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 4-வது அவென்யூ, பெசன்ட் நகர் 17-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com