நடிகர் போண்டாமணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!


நடிகர் போண்டாமணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!
x

நடிகர் போண்டாமணி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் போண்டாமணி. இவர் 1991-ம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு தனது இல்லத்தில் மயக்கம் அடைந்து விழுந்த போண்டாமணியை, உறவினர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு போண்டாமணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 60. போண்டாமணியின் உடல், சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. போண்டாமணியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் போண்டாமணி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர் போண்டாமணி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story