பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x

உத்தண்டியில் பெயர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் (51) என்பவரை அணுகினார்.

அப்போது அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ராஜேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

இந்த நிலையில், பணத்தை ரமேஷ் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக ரமேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story