பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்


பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியால் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

கிராம சேவை மைய கட்டிடம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தில் பொது மக்கள் நலன் கருதி அரசு அறிவிக்கும் திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ள வசதியாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் திறந்த சில மாதங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கிராம சேவை மைய கட்டிடம் பூட்டப்பட்டது.

பின்னர் இதை தனி நபர் ஆக்கிரமித்து கால்நடைகளை கட்டிப்போட்டும், வைக்கோல்கள் கட்டுகளை வைத்தும் இருந்தார். மேலும் கிராம சேவை மைய கட்டிடத்தின் முன்பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. மக்கள் நலனுக்காக பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் கால்நடை பராமரிப்பு மையமாக மாறியது குறித்து நேற்று முன் தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்ததை அடுத்து சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு ஆக்கிரமித்து கால்நடைகளை கட்டி வந்தவரை கண்டுபிடித்து அதிகாரிகள் எச்சரித்து அப்புறப்படுத்தினர். பின்னர் கட்டிடத்தை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். மேலும் கிராம சேவை மைய கட்டிடத்தை மகளிா் சுய உதவி குழுக்கள் மூலம் பராமரித்து, கணினி மூலம் பதிவு செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அதிகாரிகள் அதன் சாவியை மகளிர் குழு பெண்களிடம் கொடுத்தனர்.


Next Story