நீலகிரியில் கோவில்களில் நடை அடைப்பு


நீலகிரியில் கோவில்களில் நடை அடைப்பு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூரிய கிரகணத்தையொட்டி நீலகிரியில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

சூரிய கிரகணத்தையொட்டி நீலகிரியில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

சூரிய கிரகணம்

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. நேற்று பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரியனுடைய ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைப்பது பகுதி நேர சூரிய கிரகணமாகும். இந்திய நேரப்படி மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் மாலை 5.14 மணி முதல் 5.44 வரை சூரிய கிரகணம் தென்பட்டது.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் நேற்று மதியம் 12 மணி முதல் நடை மூடப்பட்டது. கூடலூரில் சக்தி விநாயகர் கோவில், மேல் கூடலூர் சந்தகடை மாரியம்மன் கோவில், செவிடிப்பேட்டை, நந்தட்டி உள்பட அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டன. தொடர்ந்து சூரிய கிரகணத்தையொட்டி மாலை 6.30 மணி வரை கோவில்கள் மூடப்படுகிறது. அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கோவில்கள் நடை அடைப்பு

தொடர்ந்து பெரும்பாலான கோவில்களில் சூரிய கிரகணம் முடிந்த பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கிரகண நேரத்தில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது.இதேபோல் ஊட்டியில் மாரியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், வேணுகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், கோடப்பமந்து விநாயகர் கோவில், சீனிவாச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் நடை மதியம் 1 மணியளவில் அடைக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

சூரிய கிரகணம் முடிந்த பின்னர், பரிகார பூஜை செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள கோவில்கள் நடை அடைக்கப்பட்டு இருந்தது.


Next Story