ராமநாதபுரத்தில் கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு
பெருக்கெடுத்து ஓடிவரும் வைகை தண்ணீரால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பெரியகண்மாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
பெருக்கெடுத்து ஓடிவரும் வைகை தண்ணீரால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பெரியகண்மாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
முழுகொள்ளளவு
தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டி உள்ளது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அனைத்தும் முழுமையாக திறந்துவிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக வைகை ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை கரையோரம் மற்றும் வைகை ஆற்று பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் ராமநாதபுரம் நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. ஏற்கனவே மழை உபரி நீர், வைகை கணக்கு ராமநாதபுரம் நீர் ஆகியவை திறந்துவிடப்பட்டு வைகை ஆற்று பகுதி ஈரப்பதத்துடன் உள்ளதாலும் தண்ணீர் தரைமட்ட அளவில் தேங்கி உள்ளதாலும் ஆயிரம் கனஅடி வைகை தண்ணீர் முழுமையாக வேகமாக ராமநாதபுரம் வந்த வண்ணம் உள்ளது.
உபரிநீர்
ஏற்கனவே ராமநாதபுரம் பெரிய கண்மாய் 5 அடி எட்டிய நிலையில் தற்போது வரும் உபரி நீர் காரணமாக 6 அடியை தாண்டி உள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் கொள்ளளவு 7½ அடி என்பதால் அதன் பாதுகாப்பு கருதி கண்மாயில் தென்கலுங்கு பகுதியில் இருந்து சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புல்லங்குடி கண்மாய்க்கும் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதனிடையே ராமநாதபுரம் நகரில் உள்ள கண்மாய்களை நிரப்பவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த வைகை தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வரும் வழியில் மேல நாட்டார், கீழ நாட்டார் கால்வாய்களிலும், களரி கால்வாய், இடது, வலது பிரதான கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பருவமழை
வைகை அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் வைகை ஆற்று பகுதி மற்றும் சுற்றி உள்ள கிராமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடலில் கலக்க விடுவதுதான் ஒரே வழி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே பெரிய கண்மாய் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.