பகிர்மான கால்வாய் உடைந்து வீணாகும் பி.ஏ.பி. தண்ணீர்
வடுகபாளையம் அருகே பகிர்மான கால்வாய் உடைப்பு ஏற்பட்டு பி.ஏ.பி. தண்ணீர் வீணாகி வருகிறது.
வடுகபாளையம் அருகே பகிர்மான கால்வாய் உடைப்பு ஏற்பட்டு பி.ஏ.பி. தண்ணீர் வீணாகி வருகிறது.
பி.ஏ.பி. பாசனம்
பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் 2-ம் மண்டலத்தில் 7,219 ஏக்கர் 4-ம் மண்டலத்தில் 7,310 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வாயில் இருந்து பூசாரிப்பட்டி ஷட்டரில் பிரிந்து 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது.
தற்போது பி.ஏ.பி. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வடுகபாளையத்திலிருந்து சனுப்பட்டி, வல்லகுண்டபுரம், செல்லும் சாலையில் பகிர்மான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
வீணாகும் தண்ணீர்
பி.ஏ.பி. பாசனத்தில் பகிர்மான கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் திறந்து விடும் போது அவசர அவசரமாக சீரமைக்கப்படுவதால் மடைகள் உடைந்து விடுகிறது. இதுவே மடைகளில் குப்பைகள், கழிவுகள் தேங்கி தண்ணீர் வீணாவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. பகிர்மான கால்வாய்கள் செல்லும் பகுதிகளில் சீமைகருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன.
இதனால் பகிர்மான கால்வாய்கள் சேதம் அடைகின்றன. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளும், விவசாயிகளும் தண்ணீர் வீணாகாமல் தடுக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.