களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: 2024-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்..!!


தினத்தந்தி 31 Dec 2023 6:30 PM GMT (Updated: 1 Jan 2024 1:07 AM GMT)

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை,

நாடு முழுவதும் 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். டிசம்பர் மாதம் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து இன்று நள்ளிரவு உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல, பெண்களிடம் அத்துமீறல், சாலை விபத்து போன்ற விரும்பத்தகாத செயல்களை தவிர்க்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், நேற்று மாலை 6 மணி முதலே சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் வாகன தனிக்கை செய்யப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணைகளும் நடந்தது.

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் செல்லாத வகையில் இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இரவு 8 மணியளவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது.

மெரினா காமராஜர் சாலையில் புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு காமராஜர் சாலையில் நடந்தே வந்தனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் காமராஜர் சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே மணிகூண்டு இருந்த பகுதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இரவு 8 மணிக்கு பிறகு இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.

இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.

இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இதேபோல, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜர் சாலையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணித்தனர். வாகன விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் சார்பில் காமராஜர் சாலையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், புத்தாண்டை கொண்டாட வந்த பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story