செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சேலத்தில் வரவேற்பு


செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சேலத்தில் வரவேற்பு
x

செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம்

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான செஸ் ஒலிம்பியாட் ஜோதி கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் இருந்து நேற்று சேலம் மாவட்டம் அரியானூருக்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா பெற்றுக்கொண்டார். அப்போது ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்த ஜோதி, ஓட்டம் மூலமாக எடுத்து செல்லப்பட்டு விநாயகா மிஷன் பல்கலைக்கழக சர்வதேச விளையாட்டு வீரர் சஞ்சிவ் தேஜாவிடம் வழங்கப்பட்டது.

பின்னர் அந்த ஜோதி சேலம் சோனா கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு தேசிய சதுரங்க விளையாட்டு வீராங்கனை திருமங்கையிடம் வழங்கப்பட்ட்டது. அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி புனித ஜான்ஸ் பள்ளி, சாரதா மகளிர் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி மற்றும் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து தேசிய வீரர், வீராங்கனைகள் ஒன்றாக இணைந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதியை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஜோதியை, கலெக்டர் கார்மேகம் வரவேற்று பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒலிம்பியாட் ஜோதி சைக்கிள் பயணம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் 4 ரோடு வழியாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் வந்தடைகிறது. பின்னர் இந்த ஜோதி மாமல்லபுரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.


Next Story