ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?
ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.
தட்கல், பிரீமியம் தட்கல்
அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட்டு எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது. வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர்சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.
பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.
தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.
ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.
விளக்கம் இல்லை
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும். உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.
சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட்டு கிடைத்துவிடும். ஆனால் சாதரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும். இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.
சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள். இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-
ரத்து செய்ய வேண்டும்
புதுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரகுநாதன்:- எனது சொந்த ஊர் தென்காசி. எனது உறவினர்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நான் மூத்த குடிமகன். அடிக்கடி ரெயில் மூலம் வெளியூருக்கு செல்வதுண்டு. அவசரமாக செல்ல வேண்டும் என்றால் தட்கல் மூலம் டிக்கெட் எடுத்து சென்று வருவேன். தற்போது தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் என்ற முறையை கொண்டு வந்துள்ளனர். இது வழக்கமாக தட்கல் கட்டணத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. எனவே என்னை போன்ற நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்கு பிரீமியம் தட்கலை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனவே பிரீமியம் தட்கல் முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் முன்பு இருந்ததை போல் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அவசரத்திற்கு பயனுள்ளதாக உள்ளது
புதுக்கோட்டையில் எக்ஸ்ரே லேப் நடத்தும் சேதுராமன்:- அவசர தேவைக்கு வெளியூர் செல்லும் போது தட்கல் முறையில் ரெயில் டிக்ெகட் எடுப்பேன். சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காது. இந்தநிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரீமியம் தட்கல் முறை கட்டணம் அதிகமாக இருந்தாலும் அவசரத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. பிரீமியம் தட்கல் முறை இருந்தாலும் சாதாரண தட்கலுக்கு கூடுதல் டிக்ெகட் அதிகரிக்க வேண்டும்.
விழாக்காலங்களில் சிரமம்
விராலிமலை பெரியார் நகரை சேர்ந்த ரமேஷ்:-
நாம் ரெயில்வே நிலையத்தில் உள்ள கவுண்ட்டரில் புக் செய்யும்போது தான் சரியான கட்டண தொகை வருகிறது. நாம் ஆன்லைனில் புக் செய்யும்போது ஆன்லைன் புக்கிங், வங்கி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. என கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பிரீமியம் தட்கல் என்ற முறையில் நாம் புக் செய்யும்போது கட்டண தொகையானது இன்னும் அதிகம் செலுத்த வேண்டும். சாதாரண தட்கல் முறையை காட்டிலும் இந்த பிரீமியம் முறையில் ஒரு நிமிட வித்தியாசத்தில் சுமார் ரூ.200 முதல் ரூ.400 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரீமியம் தட்கல் முறை சாதாரண சாமானிய மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் பொது பிரிவு பயணத்திலோ அல்லது பஸ்சிலோ பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி விழாக்காலங்களில் ரெயிலில் டிக்கெட் புக் செய்யும்போது மிகவும் சிரமமாக உள்ளது. குடும்பத்துடன் செல்லும்போது பிரீமியம் தட்கல் முறையில் தான் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் தட்கல், பிரீமியம் தட்கல் முறையில் உள்ள சிரமத்தை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
கட்டணம் அதிகம்
புதுக்கோட்டையில் ரெயில் புக்கிங் ஏஜெண்டு நடத்தி வருபவர்கள் கூறியதாவது:- புதுக்கோட்டையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலம் பயணம் செய்பவர்கள் எங்களிடம் புக்கிங் செய்து வருகின்றனர். எங்களை போன்ற ஏஜெண்டுகள் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் காலை 11.15 மணிக்கு மேல்தான் புக் செய்ய முடியும். ஆனால் அதற்குள் டிக்கெட் தீர்ந்துவிடும். எல்லா ஊர்களுக்கும் பிரீமியம் தட்கல் கிடையாது. அவசர தேவைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் தட்கல் டிக்கட் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே பிரீமியம் தட்கல் செல்கின்றனர். ஆனால் பிரீமியம் தட்கல் கட்டணம் சாதாரண தட்கல் கட்டணத்தை விட மிகவும் அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அதை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன்:- திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.
நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.