ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? பயணிகள் குமுறல்


ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்களை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத் தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன.

பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது.

வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.

தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.

ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும்.

உதாரணமாக 100 டிக்கெட்கள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் சாதாரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும்.

இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.

சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

கட்டணத்தை குறைக்க வேண்டும்

காட்பாடியை சேர்ந்த தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில இணைச் செயலாளர் செந்தில்:- நான் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளராக உள்ளதால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வேன். இதற்கு ரெயில் போக்குவரத்தை பயன்படுத்துவேன். முன்பதிவு கிடைக்காத நாட்களில் தட்கலில் முன் பதிவு செய்ய முயற்சி செய்வேன். அதில் சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காது. பிரீமியம் தட்கலில் முன்பதிவு செய்யலாம் என்றால் அதற்கு கட்டணம் அதிகம். எனவே அது போன்ற நேரங்களில் பஸ்களில் பயணம் செய்துள்ளேன். ரெயில்வே வாரியம் தட்கல் முன்பதிவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். பிரீமியம் தட்கல் டிக்கெட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெ.சுந்தரேசன்;- தட்கல் ரெயில் டிக்கெட் எடுக்கும் முறை பெரும்பாலானோருக்கு பயன்படவில்லை. மேலும் பிரீமியம் தட்கல் டிக்கெட் என்பது வழக்கமான டிக்கெட் விலையை விட குறைந்தது 3 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறவில்லை. எனவே அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில் பிரீமியம் தட்கல் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். ரெயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதனையும் தற்போது நிறுத்தி விட்டனர். நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். வெகுதூரம் செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.

அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளர் குணசீலன்:- பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு திட்டத்தின் கீழ் ஒரு சில இருக்கைகளை டைனமிக் கட்டணத்துடன் முன்பதிவு செய்யலாம். டைனமிக் கட்டண டிக்கெட் முன்பதிவுகள் அதிகரிக்கும் போது இருக்கைகள் குறைந்து வரும். வசதி படைத்தவர்கள்தான் இதில் பயணிக்க முடியும். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் அவசரமாக பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. இது போன்ற தட்கல் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை நியாயப்படுத்த முடியாது. எனவே கட்டணத்தை குறைப்பதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரக்கோணம் கடை ஒன்றில் வேலை செய்துவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அணில் குமார்:- ஒவ்வொரு ஆண்டும் பீகாரில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்க்க என்னை போன்றவர்கள் பலரும் செல்கிறோம். சில சமயங்களில் எதிர்பாராத குடும்ப சூழல் காரணமாக அவசரமாக செல்ல நேரிடும். அந்த சமயத்தில் போதுமான ரெயில்கள் இல்லாமல் இருப்பது பிரச்சினையாக இருக்கும். தட்கல் டிக்கெட்டுகளை பெறுவதற்கு பணத்தை செலவிடவேண்டி உள்ளது. டைனமிக் கட்டணத்தை செலுத்த முடியாமலும், சிலருக்கு சில ரெயில்களில் உயர்ந்த கட்டணம் காரணமாக இருப்பதாலும் அது போன்ற ரெயிலில் செல்வது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. நாங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்தாலும், பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் காத்திருப்புப் பட்டியலிலேயே இருக்கும். இதனால் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு வேறுவழியின்றி பிரீமியம் தட்கல் டைனமிக் கட்டணத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூலி தொழிலாளர்களும் பயணிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பெட்டிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் ஏ.டபிள்யூ. சர்தார் காசிம்:- தட்கல் திட்டம் மக்கள் பயன் பெற கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் இந்த திட்டத்தினால் பெரிய அளவில் பயனில்லை. காரணம் ஏசி இருக்கைக்கு காலை 10 மணிக்கும், சிலீப்பர் இருக்கைக்கு 11 மணிக்கும் ஆன்லைனில் 2 நிமிடத்தில் தட்கல் முன்பதிவு முடிந்து விடுகிறது. 2 நிமிடத்தில் பயணிகளின் விவரங்களை பதிவு செய்வதற்கு முன்பாகவே முன்பதிவு முடிந்து விடுகிறது. இதற்காக செலுத்தப்பட்ட பணம் திரும்பி வரும்போது ரூ.60 முதல் ரூ.120 வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதே போல பயணம் ரத்தானால் முற்றிலுமாக பணம் திருப்பித் தருவதில்லை. இதனால் பொதுமக்களும், எங்களைப் போன்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையையும் ரத்து செய்து விட்டனர். இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும். அல்லது கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். பிரீமியம் தட்கலை பொறுத்த வரை 800 ரூபாய் டிக்கெட்டை ரூ.2,400 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் இதை ரத்து செய்ய வேண்டும்.

வேலூரை சேர்ந்த பாலமுருகன்:-

பொதுவாக வார இறுதி நாட்கள், விசேஷ நாட்களில் தட்கல் முறையில் டிக்கெட்டுகள் உடனடியாக முன்பதிவு செய்யப்படும். மற்ற நாட்களில் தக்கல் டிக்கெட்டுகள் உடனடியாக முன்பதிவு செய்யப்படுவதில்லை. அதிக கட்டணத்தில் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் ஒரு பக்கம் கட்டண சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிடும் என்ற மன நிறைவு உள்ளது.

ஏஜென்சியான எங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் நாங்கள் மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த தட்கல் முறையில் உடனடியாக டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு தான் ஏஜென்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதற்குள் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுகிறது. எனவே தட்கல் முறையில் கூடுதலான இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

கூடுதல் ரெயில் இயக்க வேண்டும்

திருப்பத்தூர் ஜங்ஷன் ெரயில் பயணிகள் சங்கத் தலைவர் தமிழரசு:- சாதாரண மக்கள் பயணம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது ெரயில் பயணம் என்பது, விமானத்தில் செல்வது போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காரணம் தட்கல் முறையில் ெரயிலில் படுக்கை எண்ணிக்கை குறைவு. ஆனால் பிரீமியம் தட்கல் முறையில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதற்கு அதிக அளவில் ெரயிலில் பயணிகள் பயணம் செய்வது ஆகும். மேலும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு கூடுதல் ெரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும். மேலும் எந்த பாதையில் ெரயிலில் கூட்டம் ஏற்படுகிறதோ அந்த பாதையில் கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும். இதற்காக தனி குழுவை அமைத்து தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் ெரயில் நிலைய மேலாளர் அஜித்குமார்:- ெரயில்களில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு அனைத்து ெரயில்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட ெரயில்களுக்கு மட்டும் அதற்கு முன்பு அதே ெரயில்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் வாங்க வருவதால் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆனால் பிரீமியம் தட்கல் டிக்கெட் ஓப்பன் செய்தவுடன் வாங்கினால் கட்டணம் சற்று குறைவு. ஆனால் யாரும் அது போன்று எடுப்பதில்லை. கடைசி நேரத்தில் தட்கல் கிடைக்காததால், அனைவரும் டிக்கெட் வாங்க முயற்சிக்கும்போது, டிக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை, படுக்கை வசதிக்கேற்ப மிஷின் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் யாருடைய தலையிடும் கிடையாது. மேலும் பிரீமியம் தட்கல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ெரயில்வே நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் கூறியதாவது:-

திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பில் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.

நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story