டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்
டெண்டர் முறைகேடு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், ``2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்தவேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.
டெண்டர் முறைகேடு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் , சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு விளக்கத்தையும் கேட்க எடப்பாடி பழனிசாமி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.