உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியாதது ஏன்? அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்


உக்ரைன் போரால்  தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியாதது ஏன்? அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்
x
தினத்தந்தி 6 July 2023 10:48 PM GMT (Updated: 6 July 2023 10:58 PM GMT)

உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியாதது ஏன்? என்பது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு

உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியாதது ஏன்? என்பது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்து வரும் திட்ட பணிகள் தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இணை மானியம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிவாசல், தேவாலயம் பராமரிப்பு, அடக்க ஸ்தலங்கள், கபரிஸ்தான்களுக்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்து, சுற்றுச்சுவர் அமைப்பது, தேவையான இடங்கள் பெற்றுத்தருவது என்ற அடிப்படையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு தமிழகத்தில் இருந்து 1,700 பேர் கொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இணை மானியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 4 ஆயிரத்து 74 பேர் ஹஜ் பயணம் செய்துள்ளனர். அவர்கள் விரைவில் வர உள்ளனர். அவர்களுக்கு இணை மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு

உக்ரைன் போரில் பாதிப்பு ஏற்பட்டு தமிழகம் திரும்பிய மருத்துவம், வேளாண்மை, பொறியியல், பட்டப்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு மத்திய அரசு சார்ந்த நிலை உள்ளதால், அந்த மாணவர்கள் சார்ந்த மாநிலத்திலேயே படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதற்கு மத்திய அரசு பதில் தெரிவிக்காததால், மருத்துவ படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

அதேநேரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கான அதிகாரத்தில், பொறியியல், வேளாண் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதன்படி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். மருத்துவ மாணவர்கள் பாதிப்பு குறித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் எந்த அளவுக்கு பாதிக்கும் என புள்ளி விவரமாக சொல்லப்படும் கருத்தாகும். அதேநேரம் இன்று அந்த சட்டத்துக்கு ஆக்கம், ஊக்கம் அளிக்கும் முயற்சியை மத்திய அரசு எடுக்கிறது. கடந்த காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, இதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். மேலும் ஆளும் கட்சியாக வந்த நிலையில், சட்டசபையில் எதிர்ப்பை பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். அந்த சட்டத்துக்கு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஒற்றுமை ஓங்கவும், பாதுகாப்பு நிலவவும், சாதி, மதம், மொழியால் பிரிக்கக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.


Related Tags :
Next Story