

தேன்கனிக்கோட்டை
அஞ்செட்டியில் சாலையில் நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையில் நின்ற யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன. வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் இந்த யானைகள் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் அஞ்செட்டி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள பஜனை குட்டையில் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடித்தது. அங்கு ஆனந்த குளியல் போட்டு விட்டு வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை அஞ்செட்டி சாலையில் நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அறிவுறுத்தல்
மேலும் பொதுமக்கள் வாகனங்களை சாலையில் தூரத்திலேயே நிறுத்தினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானை சாலையில் உலா வருவதால் செல்பி எடுக்க வாகன ஓட்டிகள் முயற்சி செய்ய வேண்டாம். சாலையில் அதிக ஒலி எழுப்பியபடி செல்ல வேண்டும். யானைகளை கல்லால் தாக்க கூடாது. பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.