வாழைகள், நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்


தினத்தந்தி 9 Oct 2023 7:30 PM GMT (Updated: 9 Oct 2023 7:30 PM GMT)

நாடுகாணி அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழைகள், நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி



கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே புளியம்பாரை அதன் சுற்றுவட்டார பகுதியான புளியம் வயல், கத்தரித்தோடு, வாழக்கொல்லி, கரளிக்கண்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில வாரங்களாக மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

இரவில் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிடுவது, வாழைகள் - நெற்பயிர்களை சேதப்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பயிர்கள் தொடர்ந்து சேதமடைந்து விடுவதால் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு பகலாக பாடுபட்டு பராமரித்து வந்த பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

சூரிய மின்வேலியை உடைத்து இது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:-2 காட்டு யானைகள் ஜோடியாகவும், மற்றொன்று யானை தனியாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஊருக்குள் வருகிறது. இதனால் விவசாய நிலத்துக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்ட சூரிய மின் சக்தியை வேலியை காய்ந்த மரங்களை சரித்து போட்டு எளிதாக நிலத்துக்குள் வந்து விடுகிறது.

இதனால் காட்டு யானைகளை தடுக்கவும் முடிய வில்லை. வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தால் அந்த சமயத்தில் வந்து விரட்டுகின்றனர். ஆனால் தொடர்ந்து ஊருக்குள் வந்து விடுகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story