மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?


மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?
x

வெயில், மழையால் அவதிப்படும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா? என எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

அரசு பள்ளி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் உள்ள தோகைமலை-திருச்சி மெயின் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 967 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிக்கு தினமும் திருச்சி மற்றும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பஸ் மற்றும் வேன்களில் வந்து செல்கின்றனர்.

காத்து கிடக்கும் மாணவர்கள்

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பள்ளி முன்பு பரபரப்பாக காணப்படும். மாணவ-மாணவிகள் மாலை நேரங்களில் பள்ளி முடிந்ததும் தங்கள் ஊருக்கு செல்வதற்காக பள்ளி முன்பு பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.

ஆனால் அங்கு மாணவ-மாணவிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பு வசதியோ, பயணிகள் நிழற்குடைேயா இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி பள்ளி முன்பு உள்ள தோகைமலை-திருச்சி சாலையில் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தோகைமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

நிழற்குடை வேண்டும்

சக்தி:- நான் இதே அரசு பள்ளியில் தான் படித்து முடித்ேதன். இந்த பள்ளி மெயின் சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. அப்போதெல்லாம் மாணவ-மாணவிகள் மெயின் சாலைக்கு நடந்து வந்துதான் பஸ் ஏறி செல்வோம். இப்போதும் அதே நிலையில் தான் உள்ளது. பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவதி அடைகிறோம்

பிளஸ்-2 மாணவர் துளசிராமன்:- நான் தினமும் வடசேரியில் இருந்து அரசு பஸ்சில் ஆர்.டி.மலை சென்று பிளஸ்-2 படித்து வருகிறேன். தற்போது அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. காலையில் 8 மணிக்குள் பள்ளிக்கு சென்றால் தான் பொதுத்தேர்வு எழுத முடியும். பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து மெயின் சாலைக்கு நடந்து வந்து பஸ்சுக்காக காத்திருப்பேன். அந்த மெயின் சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. மழை காலங்களில் நாங்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பள்ளி சார்பிலாவது இந்த பகுதியில் நிழற்குடை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

புத்தகப்பை நனைந்து விடுகிறது

சேகர்: நான் தினமும் ஆர்.டி.மலை அரசு பள்ளி வழியாக தான் திருச்சி, தோகைமலை பகுதிக்கு சென்று வருவேன். மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம், கூட்டமாக பஸ்சுக்காக சாலையோரங்களில் காத்து கிடப்பார்கள். இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்லும். இதனால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மழை காலங்களில் அவர்கள் ஒதுங்குவதற்கு அந்த இடத்தில் ஒரு மரம் கூட கிடையாது. இதில் மாணவிகள் நிலைமையை பார்த்தால் கடும் சிரமமாக இருக்கும். மேலும் மழை காலங்களில் மாணவர்களின் புத்தகப்பைகள் பலதடவை நனைந்து விடும். இதனை கூட நான் பலமுறை பார்த்துள்ளேன். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதரில் இருப்போம்

9-ம் வகுப்பு மாணவர் மாதேஷ்:- ஆர்.டி.மலையில் இருந்து அரை கிலோ மீட்டர் ெதாலைவில் எனது கிராமம் உள்ளது. அங்கிருந்து தினமும் பள்ளிக்கு நடந்து வருவேன். தற்போது பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனால் சீக்கிரம் வந்தாலும் பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் நாங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் முட்புதர்களில் இருந்து வருகிறோம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பயணிகள் நிழற்குடை இருந்தால் கூட அங்கு நின்று விட்டு பிறகு பள்ளிக்கு வருவோம். ஆனால் அந்த வசதி இல்லை.

விபத்துகள் நடக்கிறது

நாராயணசாமி: ஆர்.டி.மலை அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மாலை நேரங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து கிடப்பார்கள். அவர்கள் ஏற்கனவே பள்ளியில் இருந்து புத்தகப் பையுடன் 10 நிமிடம் நடந்து மெயின் சாலைக்கு வந்து பஸ்சுக்காக நிற்கிறார்கள். அதனை பார்க்கும்போது மன வேதனையாக இருக்கும். மழை காலங்களில் ஒதுங்க கூட இடமில்லை. வெயில் காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மெயின் சாலை குறுகலாக உள்ளதால் அந்த பகுதியில் சில நேரங்களில் விபத்து கூட ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story