வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இந்த மாதத்துடன் நிறுத்தமா?


வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இந்த மாதத்துடன் நிறுத்தமா?
x

வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இந்த மாதத்துடன் நிறுத்தமா?

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இந்த மாதத்துடன் நிறுத்தப்படுமா? என பயணிகளிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ரெயில் சேவையை தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தினர்.

ஆன்மிக சுற்றுலா தலம்

நாகை மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் கோவில் ஆகியவற்றை கொண்டு உள்ளது. மும்மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் இந்த மாவட்டத்தில் அமைந்து உள்ளதால் மும்மதத்தினரும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இதனால் நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாகை ரெயில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது நாகூரில் இருந்து கொல்லம் சென்ற தினசரி ரெயில் மட்டுமே தென் மாவட்டத்தை இணைக்கும் ரெயிலாக இருந்தது. இந்த ரெயிலானது அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பு நிறுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாகூர்-கொல்லம் தினசரி ரெயில் இயக்கப்பட்ட வழித்தடத்தில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலும் கொரோனாவால் தடைப்பட்டது. தொடர்ந்து நாகையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவை இல்லாமல் இருந்தது. இதையடுத்து மீண்டும் இந்த ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்

கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி ேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே புதிய சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

வாரந்தோறும் சனிக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் கொல்லம், கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் வந்து சேருகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு மீண்டும் எர்ணாகுளம் சென்றடைகிறது.

புதிய கால அட்டவணை

இந்த சிறப்பு ரெயிலால் சுற்றுலா பயணிகள் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்று பயனடைந்து வந்தனர். அங்குள்ளவர்களும் நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். ரெயில்வே நிர்வாகத்தின் கால அட்டவணைப்படி இந்த சிறப்பு ரெயில் சேவை இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முடிவடைந்து விட்டது. மறு கால அட்டவணை வெளியிடப்படாததால் தொடர்ந்து இந்த ரெயில் இயக்கப்படுமா? என்கிற சந்தேகம் ரெயில் பயணிகளிடம் எழுந்தது. மறு அறிவிப்பு வராததால், ரெயில் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

நேற்றுமுன்தினம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட புதிய கால அட்டவணையில் வருகிற 7,14,21,28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், 8,15,22,29 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்துக்கும் என 4 முறை சிறப்பு ரெயிலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து இயக்க வேண்டும்

தொடர்ந்து இந்த ரெயில் இயக்கப்படுமா ? அல்லது இந்த மாதத்துடன் சேவை நிறுத்தப்படுமா? என்கிற சந்தேகம் மீண்டும் ரெயில் பயணிகளிடம் எழுந்துள்ளது. இந்த ரெயில் சேவை தொடர வேண்டும். உடனடியாக ரெயில்வே கால அட்டவணையில் இந்த ரெயில் சேவை குறித்த அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்த்குமார்:-

மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது நாகூரில் இருந்து தினந்தோறும் கொல்லம் இடையே பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பு இந்த சேவை நிறுத்தப்பட்டது.

சாதாரண ரெயில் கட்டணமாக வசூல்

கடந்த 2009-ம் ஆண்டு திருவாரூர்-நாகூர் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் நாகூர்-கொல்லம் ரெயில் இயங்கிய தடத்தில் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் வாரம் இருமுறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், வாராந்திர ரெயிலாக மட்டுமே இயங்கியது. தற்போது ரெயில்வே வெளியிட்ட கால அட்டவணையின் படி இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைந்து விடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே ஏற்கனவே ரெயில்வே வாரியத்தால் அனுமதி அளிக்கப்பட்ட சிறப்பு ரெயிலை வாரம் இருமுறை இயக்க வேண்டும். சிறப்பு ரெயில் கட்டணத்துக்கு பதிலாக, சாதாரண ரெயில் கட்டணமாக வசூலிக்க வேண்டும். தொடர்ந்து பயணிகள் வருகையை கணக்கில் கொண்டு தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

தினசரி இயக்கவேண்டும்

நாகூர்-நாகை ெரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சித்திக்:-

மும்மதத்தினரும் வழிபட்டு செல்லும் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அப்படி இருக்க தென் மாவட்டங்களில் இருந்து ரெயில் பயணம் என்பது பெயர் அளவுக்கு இருக்கிறது.

வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை 1-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியது. மீண்டும் வருகிற 29-ந்தேதி வரை 4 வாரம் ரெயில் சேவை இருக்கும் என நேற்றுமுன்தினம் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதைவைத்து பார்க்கும்போது இந்த மாதத்துடன் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ரெயில்சேவை முடிந்துவிடும் என்று தெரிகிறது.

நாங்கள் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே வேளாங்கண்ணி-எர்ணாகுளம் ரெயிலை தினசரி இயக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story