

தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கும்படி தீயணைப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மழைக்கால மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 10 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இந்த தீயணைப்பு நிலையங்களில் இருக்கும் தீயணைப்பு படைவீரர்கள் ஏற்கனவே முறையான பயிற்சி பெற்றுள்ளனர்.
30 வகை உபகரணங்கள்
இதற்கிடையே தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான ரப்பர் படகு, மிதவைகள், கயிறு, ஏணி, மரம் அறுக்கும் எந்திரம், கவச உடைகள், தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார் என மொத்தம் 30 வகையான பேரிடர் மீட்பு உபகரணங்கள் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.
இதில் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் இருக்கும் உபகரணங்களை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் நேற்று பார்வையிட்டார். இதையொட்டி அனைத்து உபகரணங்களும் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அப்போது உபகரணங்களுடன் தீயணைப்பு படைவீர்கள் அனைவரும் 24 மணி நேரமும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
பழனி
இதேபோல் பழனி தீயணைப்பு நிலையத்திலும் பேரிடர் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனி பகுதியில் வெள்ளம் மற்றும் மீட்பு பணிக்கு போதிய உபகரணங்கள் தயாராக உள்ளன. லைப் ஜாக்கெட்டுகள், ரப்பர் படகு உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார்.