தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது


தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது
x

தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் சுற்றித்திரிந்த 2 மாடுகள் ஆகியவற்றை பிடித்து சோழம்பேடு ரோட்டில் ஆவடி மாநகராட்சி சார்பில் பராமரித்து வரும் கொட்டகையில் அடைத்தனர்.

இதையடுத்து சுமார் 50 பேர் அதிரடியாக அங்கு வந்து மாட்டு தொழுவத்தில் அடைத்து வைத்துள்ள மாடுகளை அவிழ்த்து விடுமாறு கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திருமுல்லைவாயல் சோழன் நகரை சேர்ந்த மகாலட்சுமி (வயது 30), உமா (37), தேவி (50) உள்ளிட்ட சிலர் தொழுவத்தின் நுழைவு வாயிலில் பூட்டி இருந்த கதவை திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கு அடைத்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து கொண்டு சென்றனர்.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி, உமா, தேவி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story