காண்டூர் கால்வாயை தூர்வாரும் பணி மும்முரம்


காண்டூர் கால்வாயை தூர்வாரும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 9 July 2023 9:00 PM GMT (Updated: 9 July 2023 9:00 PM GMT)

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் காண்டூர் கால்வாயை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் காண்டூர் கால்வாயை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காண்டூர் கால்வாய்

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பரம்பிக்குளத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மின் உற்பத்தி செய்த பிறகு பீடர் கால்வாய் வழியாக ஆழியாறுக்கும், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தூர்வாரும் பணி

அடர்ந்த வனப்பகுதி வழியாக 49 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறைகளை குடைந்து காண்டூர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் காண்டூர் கால்வாயில் மழையின் காரணமாக பறைகள் உருண்டு விழுந்து கிடக்கின்றன. மேலும் செடிகள், மரக்கிளைகளும் ஆங்காங்கே கிடக்கிறது. இதன் காரணமாக காண்டூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரை முழுமையாக திருமூர்த்தி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது பொதுப்பணித்துறை மூலம் காண்டூர் கால்வாயை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

செடி, கொடிகள் அகற்றம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சர்க்கார்பதி முதல் திருமூர்த்தி அணை வரை காண்டூர் கால்வாய் 49.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் ஆழியாறு பகுதிக்கு உட்பட்ட சர்க்கார்பதி முதல் நவமலை வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயில் கிடக்கும் பாறைகள், செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.

தற்போது 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து விட்டன. சுரங்கப்பாதை பகுதியில் மட்டும் 8 கிலோ மீட்டருக்கு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. விரைவில் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story