பிரம்மதேசம் அருகே லாரி சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி தொழிலாளி பலி


பிரம்மதேசம் அருகே    லாரி சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:45 PM GMT)

பிரம்மதேசம் அருகே வீட்டுவாசலில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தாா்.

விழுப்புரம்

பிரம்மதேசம்,

தொழிலாளி

மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ஏழுமலை (வயது 55), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்புள்ள வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அதே தெருவில் வசிக்கும் மணி மகன் குமரேசன்(31) என்பவர் தனக்கு சொந்தமான லாரியில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் வாகன உற்பத்தி தொழி்ற்சாலையில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு வெளியூர் செல்லும் வழியில் தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டுவாசல் முன்பு படுத்திருந்த ஏழுமலை தலை மீது லாரி சக்கரம் ஏறி, இறங்கியது. இதில் ஏழுமலை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் வலைவீச்சு

இதை கண்டு பதறிய குமரேசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த குடும்பத்தினர் ஏழுமலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுததுடன், இதுபற்றி பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய குமரேசனை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டுவாசல் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி லாரி சக்கரம் ஏறி இறந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story