வெல்டிங் பணியின்போது டீசல் டேங்கர் வெடித்து தொழிலாளி பலி


வெல்டிங் பணியின்போது டீசல் டேங்கர் வெடித்து தொழிலாளி பலி
x

வெல்டிங் பணியின்போது டீசல் டேங்கர் வெடித்து தொழிலாளி பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் இந்திரா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 48). இவர், மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் பகுதியில் டேங்கர் லாரிகளுக்கு வெல்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார்.

நேற்று மாலை பெட்ரோல் நிலையங்களுக்கு டீசல் நிரப்பும் டேங்கர் லாரி ஒன்று டேங்கரில் ஓட்டை இருந்ததை சரி செய்வதற்காக இவரது பட்டறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஓட்டையை அடைப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி காலியாக இருந்த டேங்கர் மேல் ஏறி வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது வெல்டிங் எந்திரத்தில் இருந்த நெருப்பு பொறி டேங்கருக்குள் விழுந்தது. அதில் மிச்சம் மீதி இருந்த டீசலில் நெருப்பு பட்டதில் திடீரென டேங்கர் வெடித்து சிதறியது. இதில் சுமார் 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கிருஷ்ணமூர்த்திக்கு அம்சலேகா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.


Next Story