உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளின் பேரணி மற்றும் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மந்தைவெளியில் முடிவடைந்தது. அப்போது கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளும், அதை கட்டுப்படுத்துவதின் அவசியத்தையும் பொதுமக்கள் உணர வேண்டும் என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப் பை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் மணிமேகலை, வட்டார சுகாதார புள்ளியலாளர் அருண்குமார் மற்றும் டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.