ஆட்டோ மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
ஆட்டோ மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
சேலத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்று ராமநாதபுரம் வந்தது. புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் வந்தபோது அரசு பஸ் டிரைவர் ரவிக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்டது.
இதனால் பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ நொறுங்கி அதில் இருந்த டிரைவர் ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூமிநாதன் மகன் மலைச்சாமி (வயது 32) என்பவர் படுகாயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மலைச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். பலியான ஆட்டோ டிரைவர் மலைச்சாமிக்கு கவிதா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பஸ் டிரைவர் ரவி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.