"நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல" மும்பை முழுவதும் ராகுல்காந்தி சுவரொட்டி

பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் புகைப்படத்தை மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர். #RahulGandhi
"நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல" மும்பை முழுவதும் ராகுல்காந்தி சுவரொட்டி
Published on

மும்பை,

பாரதீய ஜனதா கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவையில் ஆவேசமாக பேசினார்.

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரம் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் அவர் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு ஏவுகணைகளை வீசினார்.அரை மணி நேரம் பேசிய அவரது பேச்சில் அனல் பறந்தது. அதன்பின்னர் அவர் நேராக பிரதமர் மோடியிடம் சென்று அவரை கட்டித்தழுவினார்.

இது நாடாளுமன்றம். சபையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் (காங்கிரஸ்) இதை விரும்பலாம். ஆனால் நான் விரும்பவில்லை. குறிப்பாக அவர் பிரதமரை தழுவிவிட்டு கண்ணடித்ததை விரும்பவில்லை. இத்தகைய நாடகத்துக்கு இங்கு இடம் இல்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியிருந்தார்.

பாஜகவினரும் ராகுலை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் ராகுலின் செயலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் புகைப்படத்தை மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர். அதில், "நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல" என்று எழுதப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com