புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
Published on

போபால்,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 4-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து டெல்லியில் இருந்து நேற்று முதல் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் போது பல்வேறு விபத்துகளையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் தங்கள் சொந்த ஊரான மத்தியபிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளுக்கு பஸ் மூலம் பயணம் மேற்கொண்டனர்.

மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டம் ஜோராசி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com