மேகதாது அணை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது.
மேகதாது அணை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
Published on: 

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து, இந்த பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக்கோரி கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனை காப்பதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) இன்று காலை 10.30 மணியளவில், தலைமைச்செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com