அமெரிக்காவின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிக்கு 2 இந்தியர்கள் பெயர் பரிசீலனை


அமெரிக்காவின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிக்கு  2 இந்தியர்கள் பெயர் பரிசீலனை
x
தினத்தந்தி 2 Oct 2017 5:24 PM IST (Updated: 2 Oct 2017 5:24 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் ஊழல் புகார் காரணமாக பதவி விலகி உள்ளார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நபர்கள் பட்டியலில் 2 இந்தியர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மந்திரிசபையில் சுகாதார மந்திரி பதவி வகித்து வந்தவர் டாம் பிரைஸ் (வயது 62).
அங்குள்ள சட்டதிட்டப்படி, நாட்டின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருப்பவர்களை தவிர்த்து வேறு யாரும், அரசு பணியின்போது தனி விமானங்களில் சொகுசு பயணம் மேற்கொள்ள முடியாது.

ஆனால் இந்த சட்டதிட்டத்துக்கு மாறாக சுகாதார மந்திரி டாம் பிரைஸ், அரசுப்பணியின்போது, தனி விமான சொகுசு பயணங்களை மேற்கொண்டு ஊழல் புரிந்துள்ளார்.

இதன் மூலம் நாட்டுக்கு அவர் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடி) இழப்பு ஏற்படுத்தி உள்ளார் என ‘பொலிடிக்கோ’ என்ற அரசியல் செய்தி இணைய தளம் கண்டுபிடித்து குற்றம் சாட்டியது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினார். இவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதேநேரம் சுகாதாரத் துறை துணை அமைச்சராக உள்ள டான் ஜெ ரைட், தற்காலிக சுகாதார அமைச்சராக செயல்படுவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரைஸ் பதவி விலகியதையடுத்து, இந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு ஊடகங்கள், ஊகங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு மாற்று திட்டத்தைக் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

இதுபோல மற்றொரு இந்திய - அமெரிக்கரும் லூசியானா மாகாண முன்னாள் ஆளுநருமான பாபி ஜிண்டால், புளோரிடா மாகாண முன்னாள் கவர்னர் ராக் ஸ்காட், கால்நடை விவகார மந்திரி டேவிட் ஷல்கின், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் கமிஷனர் ஸ்காட் காட்லீப், மார்ஷா பிளாக்பர்ன் எம்.பி., உள்ளிட்டவர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.
1 More update

Next Story