ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி 100 பயணிகள் படுகாயம்

அமெரிக்காவில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி 100 பயணிகள் படுகாயம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மியாமி நகருக்கு பயணிகள் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயிலில் 139 பயணிகளும், ரெயில்வே ஊழியர்கள் 8 பேரும் பயணித்தனர்.

இந்த ரெயில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.35 மணிக்கு தெற்கு கரோலினா மாகாணத்தின் கேய்ஸ் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் மற்றும் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அதே போல் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்துபோனது.

இந்த கோர விபத்தில் பயணிகள் ரெயிலில் பயணம் செய்த ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த ரெயில் விபத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி தெற்கு கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக் மாஸ்டர் கூறுகையில், தண்டவாள பாதையை மாற்றி விடும் இடத்தில் நடந்த மனித தவறுதான் இதற்கு காரணம். பயணிகள் ரெயிலின் பாதை சரியான திசை தண்டவாளத்திற்கு திருப்பி விடப்படாமல் சரக்கு ரெயில் வந்த பாதையை நோக்கி திருப்பி விடப்பட்டு இருக்கிறது. இதனால்தான் 2 ரெயில்களும் மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் பலியான இருவருமே ரெயில்வே ஊழியர்கள்தான் என்றார்.

ரெயில் பாதுகாப்பு பற்றிய விவாதத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com