அதிபருக்கு எதிர்ப்பு மாலத்தீவு சுகாதார மந்திரி ராஜினாமா

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்றுக்கொள்ளாததால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா செய்துள்ளார். #Maldives
அதிபருக்கு எதிர்ப்பு மாலத்தீவு சுகாதார மந்திரி ராஜினாமா
Published on

மாலி,

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு நாட்டின் சுகாதார மந்திரியாக பதவி வகித்து வந்தவர் ஹூசைன் ரஷீத். இவர் திடீரென்று நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த வியாழக்கிழமை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தப்போவதில்லை என்று அதிபர் அப்துல்லா யாமீன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே ஹூசைன் ரஷீத் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அவர் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில், நாட்டின் உயரிய அமைப்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து நடக்கப்போவதில்லை என்ற அரசின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. இது எனது மனசாட்சியை உறுத்துகிறது. அதனால் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடன உத்தரவை பிறப்பித்தார். இதனை அவருடைய அரசியல் ஆலோசகர் அஜிமா சுக்கூர் நேற்று அறிவித்தார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com