

புதுடெல்லி,
கடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
முன்னாள் அதிபர் முகமது நஷீத் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், மாலத்தீவு மக்களின் சார்பாக இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கிறோம். மாலத்தீவு அதிபரால் கைது செய்யப்பட்ட நீதிபதிகள், அரசியல் கட்சியினரை கைது செய்ய ராணுவ பலத்துடன் இந்தியா தூதரை அனுப்ப வேண்டும். இந்தியா அங்கு ராணுவத்தை நிலை நிறுத்த கோருகிறோம். அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத்தீவு பிராந்திய தலைவர்களுக்கு செல்லும் நிதி பரிமாற்றத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு அரசு இணங்க மறுத்ததை அடுத்து மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மற்றும் மாலத்தீவு மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது எங்களுக்கு கவலையை அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது கவலைக்குரியது. மாலத்தீவு நாட்டில் நிலவும் சூழ்நிலையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.