மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்ப்- மோடி தொலைபேசியில் ஆலோசனை, சீனா சொல்வது என்ன?

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பெய்ஜிங்,
மாலத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம், அரசியல் கட்சியினர் மற்றும் நீதிபதிகள் கைது நடவடிக்கை நிலையை மோசமாக்கியது.
இந்நிலையில்தான் இந்தியா மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்தார். இதற்கு சீனா உடனடியாக எதிர்ப்பை பதிவு செய்தது. முகமது நஷீத், அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத்தீவு பிராந்திய தலைவர்களுக்கு செல்லும் நிதி பரிமாற்றத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என அமெரிக்காவையும் வலியுறுத்தினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி மாலத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ஆலோசனையை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், இருநாட்டு தலைவர்களும் மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த கவலையை தெரிவித்தனர். ஜனநாயக அமைப்பு மற்றும் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இரு தலைவர்களும் பேசினர். இந்திய-பசிபிக் பிராந்திய பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் அப்போது உறுதி கொண்டனர்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் டொனால்டு டிரம்ப் ஆலோசனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாடுகள் மாலத்தீவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறிஉள்ளது.
“மாலத்தீவில் இப்போது நிலவிவரும் பிரச்சனையானது உள்நாட்டு பிரச்சனையாகும். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முறையாக பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையை மேற்கொண்டு தீர்க்கவேண்டும்,” என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story






