3 குழந்தைகளுடன் தாயை சாகடித்த வளர்ப்புத் தாய்க்கு மரண தண்டனை


3 குழந்தைகளுடன் தாயை சாகடித்த வளர்ப்புத் தாய்க்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 10 Feb 2018 3:15 AM IST (Updated: 10 Feb 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் ஹாங்சூ பகுதியில் சூ, இ லின் ஷெங்க்பின் தம்பதியரின் வீட்டில், அவர்களது 3 குழந்தைகளையும் காக்கும் வளர்ப்புத்தாயாக பணியில் சேர்ந்தவர் மோ ஹூவான்ஜிங்.

பீஜிங்,

மோ, சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவர். சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடன்காரர் ஆனார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21–ந் தேதி ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்தார். இந்தக் கடனில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெரும் தொகை தேவை என உணர்ந்தவர், அந்தத் தொகையை அடைவதற்கு ஒரு சதித்திட்டம் தீட்டினார்.

அதாவது தான் வேலை பார்க்கும் வீட்டில் தீ வைத்துவிட்டு, அந்த தீயை விரைவாக அணைத்து நற்பெயர் பெற்று அதன் மூலம் வீட்டு எஜமானி சூவிடம் எளிதாக பெரும் தொகையை கடன் வாங்கி, சூதாட்டக்கடன்களை அடைத்து விடலாம் என எண்ணினார். இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து இணையதளத்தில் தகவல்கள் திரட்டி வியூகங்கள் வகுத்தார்.

அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22–ந் தேதி அதிகாலை நேரத்தில், லைட்டர் கொண்டு தனது எஜமானி வீட்டில் உள்ள புத்தகங்களுக்கு தீ வைத்தார். அந்த தீ அங்கு கிடந்த சோபாக்கள், திரைகளில் பிடித்து பின்னர் அறை முழுவதும் மின்னல் வேகத்தில் பரவியது. தீயை அவரால் நினைத்தபடி அணைக்க முடியாமல் போயிற்று.

தீயின்போது வெளிப்பட்ட கார்பன் மோனாக்சைடு நச்சு புகையை சுவாசித்த வீட்டின் எஜமானி சூவும், அவரது 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.

இது தொடர்பான வழக்கில் மோ கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த ஹாங்சூ இடைநிலை மக்கள் கோர்ட்டு அவர் குற்றவாளி என கண்டு, மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தது.

1 More update

Next Story